என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் - ஒரே நாளில் 14 மீனவர்கள் கைது
    X

    நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் - ஒரே நாளில் 14 மீனவர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
    • ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன், வலை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 45 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதுடன் அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாக்ஜலசந்தி கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பனில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடைப்பட்ட பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி படகில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். அனைத்து படகுகளும் சென்றுவிட்டபோதும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் (வயது 51) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    அந்த படகில் தாவிக்குதித்த வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். இது எங்கள் நாட்டு எல்லை என்று கூறிய அவர்கள், அந்த படகில் இருந்த உரிமையாளர் ஜஸ்டின், டெனிசன் (39), மோபின் (24), சைமன் (55), சேகர் (55) ஆகிய 5 மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களின் படகை இன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்ட தகவல் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் நாளுக்கு நாள் நசிந்துவரும் நிலையில் தொடர்ந்து மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் வேறு தொழிலுக்கு செல்ல எண்ணுவதாகவும் தெரிவித்தனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விசைப்படகுகளை குறிவைத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தற்போது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்ய தொடங்கியுள்ளனர்.

    எல்லை தாண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு என்ற பெயரில் நடுக்கடலில் கடத்தி செல்லும் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×