தமிழ்நாடு செய்திகள்

கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலி- குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
- கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.
- முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன் தெரு , பணிக்கன் தெரு, காமாட்சிஅம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் உறையூர் பகுதியில் பதட்டமும் பரபரப்பும் உண்டானது. அந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்தவாறு நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாசுபட்ட குடிநீர் காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவதற்கு மாநகராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்து உள்ளார்.
மேலும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.