தமிழ்நாடு செய்திகள்

உச்சகட்ட சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி- கரூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தொண்டர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.
விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்ததில் பலர் குழந்தைகள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்திற்கு நாளை அதிகாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூற உள்ளார் என்றும் கூறப்படுகிறது.