தமிழ்நாடு செய்திகள்

விபத்துகளை தவிர்க்க புது முயற்சி: தஞ்சை நெடுஞ்சாலையில் '3 டி' வடிவ எச்சரிக்கை குறியீடு
- சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
- சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று ‘3 டி’ வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உள்ள பல்வேறு சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும், குறிப்பாக பாதசாரிகள் சாலைகளை கடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதனை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் லட்சுமிபிரியா, வீரமுத்து ஆகியோர் தஞ்சாவூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க பல்வேறு குறியீடுகளை வரைந்து வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் மேம்பாலத்தில் மண்டைஓடு சின்னம் வரையப்பட்டது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையான நம்பர் 1 வல்லம் சாலை எலிசா நகர் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்தை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் '3 டி' வடிவ (முப்பரிமாண) எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.
சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று '3 டி' வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது. இந்த சாலையில் 2 இடங்களில் பரீட் சார்த்த முறையில் இக்குறியீடு வரையப்பட்டு உள்ளது. மேலும், 2 இடங்களில் மண்டை ஓடு சின்னமும் வரையப்பட்டு உள்ளது.
இந்த குறியீடு பலன்தரும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களில் இக்குறியீடுகளை வரைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.