தமிழ்நாடு செய்திகள்

வடமாநிலங்களில் ராணுவத்தினர் சோதனையால் திருப்பூரில் 40 சதவீத பனியன் சரக்குகள் தேக்கம்
- வடமாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள் ஒரு சில தினங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
- சகஜநிலை திரும்பியவுடன் வழக்கமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நல்லூர்:
திருப்பூரில் இருந்து லாரி, ரெயில் மூலம் பனியன் சரக்குகள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் வர்த்தகத்திற்காக வெளியிடங்களுக்கு செல்கின்றன. பெரிய விற்பனை கடைகள், மையங்கள், ஏஜெண்டுகள், சந்தைகள், சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் என பல்வேறு தரப்பிலும் சரக்குகள் மொத்த, சில்லறை விற்பனைக்காக விநியோகம் செய்யப்படுகின்றன.
கடந்த 7-ந்தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் போர்ச்சூழல் நடவடிக்கை காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் உள்நாட்டு பனியன் சரக்குகள் 40சதவீதம் நிறுத்தி வைக்கப்பட்டதாக பனியன் வர்த்தக ஏஜெண்டுகள் தெரிவித்தனர்.
பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாலும், சோதனை நடவடிக்கைகள் காரணமாக வாகனங்கள் செல்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதாலும் பனியன் சரக்குகளை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பனியன் சரக்குகளை அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் கூறியதாவது:-
'இந்தியா-பாகிஸ்தான் போர் அறிவிப்பு குறித்த தகவல் வெளியானபோதே வடமாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள் ஒரு சில தினங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் பல மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்ப முடியவில்லை. தற்போது போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இருந்தாலும் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, ஐதராபாத், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு செல்லும் பனியன் சரக்குகள் திருப்பூரில் முடங்கியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையால் சுமார் 30முதல் 40சதவீத பனியன் சரக்குகளை வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. சகஜநிலை திரும்பியவுடன் வழக்கமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.