தமிழ்நாடு செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
- இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருவது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. கடந்த மாதம் 29-ந்தேதி 8 மீனவர்களையும், கடந்த 1-ந் தேதி 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்தனர்.
அதேபோல் அவ்வப்போது மீனவர்கள் மீது கற்களை வீசியும், தாக்குதல் நடத்தியும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்துகொண்டு விரட்டி அடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து நேற்று காலை 456 விசைப்படகுகள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றன.
அதில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையில் அமைந்துள்ள நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தன. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சற்று தூரத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தன. இதனால் பதட்டம் அடைந்த மீனவர்கள் உடனடியாக வலைகளை படகுக்குள் இழுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனாலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஈசக்பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகில் தாவிக்குதித்தனர். பின்னர் நீங்கள் மீன்பிடிப்பது எங்கள் நாட்டின் எல்லை, இங்கு வந்து மீன்பிடிக்க கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று திட்டினர்.
பின்னர் அந்த படகில் இருந்த சண்முகம் (வயது 50), டுதர் (40), எடிசன் (51), சக்திவேல் (47), ஜெகதீஷ் (48), டல்வின்ராஜ் (46), அன்பழகன் ஆகிய 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு கொண்டு சென்றனர்.
அங்கு முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 7 பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைதான தகவலை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இலங்கை அரசால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.