தமிழ்நாடு செய்திகள்

தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. இல.கணேசன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்
- நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
- அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஆளுநர் ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நாகாலாந்து மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.