தமிழ்நாடு செய்திகள்

பிற மொழிகள் கற்பதால் நமது அடையாளம் மாறப்போவதில்லை - அண்ணாமலை
- நமக்கு அச்சம் இருக்க வேண்டும். அச்சமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது.
- குழந்தைகளுக்கு 3, 4 மொழிகளாவது கற்றுக்கொடுக்க வேண்டும்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்ற புத்தக திருவிழா தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குழந்தைகளுக்கு பொன் பொருளை கொடுப்பதை விட புத்தகங்களை பரிசாக கொடுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு தெளிவு கிடைக்கும். பள்ளி குழந்தைகள் பாட புத்தகங்களை திரும்பத்திரும்ப படிக்கின்றனர். நான் இப்பகுதியில் 2 ஆண்டுகள் ஆரம்ப கல்வி படித்துள்ளேன்.
நமக்கு அச்சம் இருக்க வேண்டும். அச்சமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கும் வகையில் நாம் எடுத்துக்கூற வேண்டும்.
கிராம பகுதியில் உள்ள குழந்தைகள் சூழ்நிலை காரணமாக அச்சத்தை எதிர்கொள்கின்றனர். நகர் பகுதியில் இருக்கும் குழந்தைகள் அனைத்து வசதிகளும் கிடைப்பதால் அவர்களுக்கு அச்சத்தை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது உழைக்கும் இளம் வயதினர் அதிகமாக உள்ளனர். இன்னும் 35 ஆண்டுகளுக்கு பிறகு நாடு வளர்ச்சி இருக்காது. ஏனென்றால் உழைக்கும் வயது குறைந்து முதியவர்கள் தான் இருப்பார்கள். ஆகையால் தற்போது நம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல உழைக்கும் இளைஞர்கள், நல்ல அதிகாரிகள் தேவை.
குழந்தைகளுக்கு 3, 4 மொழிகளாவது கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிற மாநிலங்களில் இருந்து வருவோரிடம் பேச முடியும். மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும். ஆனால் சிறந்த மொழி தமிழ் தான் என்று கூறியுள்ளார். பிற மொழி கற்பதால் நம் அடையாளம் மாறப்போவதில்லை. நாம் புத்தகங்களை படித்த பிறகு மற்றவர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.