தமிழ்நாடு செய்திகள்

விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. நடத்திய பேச்சுவார்த்தையை பா.ஜ.க. முறியடித்தது- அன்வர் ராஜா
- அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள்.
- விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
பாரதிய ஜனதா திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்த காய்களை நகர்த்தி வருகிறது. பல விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் இருந்து அவர் விலகி செல்கிறார். அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள பல மூத்த தலைவர்களுக்கு பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது பிடிக்கவில்லை. தமிழகத்தில் 14 சதவீதம் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியும் முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தான் சொல்லி இருந்தார். ஆனால் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதும் பாரதிய ஜனதா பதறி விட்டது.
அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் இடையே ரகசிய பேச்சு நடந்தது எனக்கு தெரியும். விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விஜய் கட்சியினர் முதல்-மந்திரி பதவியை விட்டு தரவேண்டும் என்றனர். ஆனால் அதை அ.தி.மு.க. ஏற்கவில்லை. என்றாலும் பேச்சுவார்த்தை முடியாமல் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருந்தது. இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் கூட்டணி வந்தால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். அந்த பயத்தில்தான் அமித்ஷா அவசரம் அவசரமாக சென்னைக்கு வந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தால் அ.தி.மு.க. வுக்கு தான் பாதிப்பு ஏற்படப் போகிறது. இது அ.தி.மு.க.வில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.