தமிழ்நாடு செய்திகள்

மாணவியை கர்ப்பமாக்கிய உதவி பேராசிரியர் கைது
- பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
- புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. நேற்று அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதுபற்றி தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தபோது அவர் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி என்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாழம்பூர் போலீசார் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவி படித்து வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி அவரை கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது.
கடந்த மாதம் ராஜேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றதால், தனது கர்ப்பத்தை கலைக்க ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சென்னையில் வசித்து வரும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாணவியின் தந்தை தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.