செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பயணிகள் வசதிக்காகவும், செங்கல்பட்டு கோர்ட்டு அருகே மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்த புதிய பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில், 9.95 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய பஸ் நிலையத்தில், 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், 55 கார்கள், 325 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கு போதுமான வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன.
பஸ் நிலையத்தில் 35 கடைகள், உணவகங்கள், பயணிகளுக்கான ஓய்வறைகள், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படுகின்றன.
இந்த பஸ் நிலைய வளாகத்தில் அரசு பஸ்களுக்கான பணிமனையும் அமைக்கப்படுகிறது. தற்போது புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் அரசு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்தி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
செங்கல்பட்டில் ஏற்கனவே உள்ள பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவை நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து மிகுந்த சாலையில் இருப்பதால், செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்படுவதோடு, அரசு பஸ்களின் பணிமனையும் இதே வளாகத்தில் அமைக்கப்படுவதால், இந்த புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் வரும் தீபாவளிக்கு முன்னதாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற தகவல் செங்கல்பட்டு நகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.