தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
- சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.
- ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, சென்னையில் உள்ள அவரது மகன் அருண் நேருவின் வீடு, தம்பி ரவிச்சந்திரன் வீடு, கோவையில் உள்ள இன்னொரு தம்பியான மணி வண்ணன் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினார்கள்.
இந்த சோதனை பல இடங்களில் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.
அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் நடத்தி வரும் டி.வி.எச். கட்டுமான நிறுவனம், டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் மின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018 -ம் ஆண்டு வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
இதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் தம்பி ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை மேற்கொண்டிருந்த அதிகாரிகள் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் தங்களது வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். இதனால் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.
இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் 4 மணி நேர விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நேற்று இரவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாக ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.