தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம் மேம்பாலத்தில் திடீர் பள்ளம்
- சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது.
- பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது.
தாம்பரம்:
தாம்பரத்தில் மேற்கு, கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் உள்ளது. முடிச்சூர், பெருங்களத்தூர், பல்லாவரம், வேளச்சேரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் எளிதாக செல்வதற்காக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலால் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
புதுபெருங்களத்தூரில் இருந்து முடிச்சூர் சாலை மற்றும் வேளச்சேரி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் மேம்பாலத்தின் மேல் உள்ள பாதையில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பாதையில் மேம்பாலத்தின் மேல் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து அதில் வாகனங்கள் செல்லாதவாறு தடுத்தனர்.
இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பின்னர் இன்று காலை பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது. பின்னர் மேம்பாலத்தில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன.