தமிழ்நாடு செய்திகள்

பாடாலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: தந்தை - மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
- நேற்று இரவு பாலபிரபு தனது மனைவி குழந்தை மற்றும் மாமனாருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார்.
- விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
குன்னம்:
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).
பாலபிரபு தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கவுரி சென்னையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கோடை விடுமுறையை தொடர்ந்து பாலபிரபு குடும்பத்துடன் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் சென்றார். ஜூன் 2-ந் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்கள் சென்னை புறப்பட ஆயத்தம் ஆகினர்.
நேற்று இரவு பாலபிரபு தனது மனைவி, குழந்தை மற்றும் மாமனாருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். காரை பாலபிரபு ஓட்டினார். கார் இன்று காலை திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. பெருமாள் பாளையம் பூமாலை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சாலையோரத்தில் நின்ற புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பாலபிரபு, மாமனார் கந்தசாமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது குழந்தை கவிகா, தாய் டாக்டர் கவுரி ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றினர். ஆனால் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட சில நொடிகளில் குழந்தை கவிகா உயிர் பிரிந்து விட்டது. அதன் பின்னர் கவுரியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் புளிய மரத்தில் மோதிய விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.