தமிழ்நாடு செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 7, 11-ந்தேதி உள்ளூர் விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு
- அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
- 2 சனிக்கிழமைகள் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசியில் காசிவிசுவ நாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு 7 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
இந்த நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 26-ந் தேதி மற்றும் மே 3-ந்தேதி ஆகிய 2 சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.