தமிழ்நாடு செய்திகள்

பள்ளத்திற்குள் விழுந்து கணவன்-மனைவி பலியான சம்பவம்: என்ஜினீயர்கள்-ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் உயிரிழந்தனர். மகள் தீக்ஷிதா பலத்த காயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்துக்கு காரணமான பாலப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் என்ஜினீயர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கவுதம், ஒப்பந்ததாரர் சிவக்குமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்தை ஏற்படுத்தி மரணம் ஏற்படுத்துதல், உரிய பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தாமல், விபத்து ஏற்பட காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.