தமிழ்நாடு செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
- சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
- சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாக்கியலட்சுமி உயிரிழந்தார்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு பெண்கள் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 26-ந்தேதி பெண் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் தரை மட்டமாயின.
இந்த வெடி விபத்தில் சொக்கம்பட்டி மாரியம்மாள் (வயது 51), கூமாபட்டி திருவாய்மொழி (48), எம். சொக்கலிங்கபுரம் கலைச் செல்வி (35) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த வெடி விபத்தில் 100 சதவீதம் தீக்காயம் அடைந்த பாக்கிய லட்சுமி (55) என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாக்கியலட்சுமி உயிரிழந்தார்.
இதன்மூலம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த கோமதி (55), பாத்திமுத்து (55), ராபியா பிவீ (50), ராமசுப்பு (43), லட்சுமி(40), முனியம்மாள் (40) ஆகிய 6 பெண் தொழி லாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.