தமிழ்நாடு செய்திகள்

கோவையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம்- அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர்
- ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அங்கு அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் மற்றும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து உதயநிதி காரில் புறப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தார்.
அங்கு அவரை கலெக்டர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஹாக்கி மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அங்கு நடந்து வரும் விழாவில் ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.239.41 கோடி மதிப்பில் 25 ஆயிரத்து 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.