தமிழ்நாடு செய்திகள்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு- வனத்துறை அறிவிப்பு
- தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நாள்தோறும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த 2-ந் தேதி அனுமதி அளித்தது. எனினும் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் செய்தி மக்களை சென்றடையாததாலும், தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து பக்தர்கள் இன்று மட்டும் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனால் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.