தமிழ்நாடு செய்திகள்

ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய காட்சி.
காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் விநியோகம் - திருப்பூர் மாநகராட்சி ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணியிட மாற்றம்
- முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் வடக்கு பகுதியை சேர்ந்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்த பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட்கள் வழங்கி உள்ளனர். அதில் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பானுமதி கேட்டபோது, ஆஸ்பத்திரி ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பானுமதி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன், ஆஸ்பத்திரிக்கு வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த குளுக்கோஸ் பாக்கெட்டுகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது அதில் ஒரு சில காலாவதியான பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கவனக்குறைவாக நடந்து கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையின் மருந்தாளுனர் வீர பராசக்தி, ஆய்வக நுட்பனர் நாகஜோதி, செவிலியர் கோமதி உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது. அஜாக்கிரதையாக செயல்படாமல் கவனமாக செயல்பட மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.