தமிழ்நாடு செய்திகள்

வரதட்சணை கொடுமை வழக்கில் சம்மன்: 10 நாள் அவகாசம் கேட்டு இருட்டுக்கடை உரிமையாளரின் மருமகன் தரப்பில் மனு
- அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்ராம் சிங் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
- பல்ராம்சிங் வீட்டார் தரப்பில் வக்கீல் பரிமளம் ஆஜரானார்.
நெல்லை:
நெல்லையின் பிரபல இருட்டுக்கடை உரிமையாளரான கவிதா- ஹரிசிங் தம்பதியரின் மகள் கனிஷ்காவிற்கும், கோயம்புத்தூரை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் பல்ராம்சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமத்தை எழுதி தருமாறு கேட்பதாக கூறி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு பாளையங்கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்ராம் சிங் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று பல்ராம் சிங் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்த்து இருட்டுக்கடை உரிமையாளர் தரப்பினர் வக்கீல் ரமேஷ் என்பவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.
ஆனால் பல்ராம்சிங் வீட்டார் தரப்பில் வக்கீல் பரிமளம் ஆஜரானார். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பல்ராம் சிங் சென்றிருப்பதால் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பு வக்கீல், போலீஸ் நிலையத்தில் மனு அளித்துவிட்டு சென்றார்.