தமிழ்நாடு செய்திகள்

சூலூர் அருகே தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
- வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- சோதனை நடந்து வரும் தொழில் அதிபர் ராமச்சந்திரன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.
சூலூர்:
சூலூர் அருகே உள்ள செலக்கரச்சல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். தொழில் அதிபரான இவர் நூற்பாலை மற்றும் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு இவரது வீட்டிற்கு 6-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே வராதவாறும், உள்ளே இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாதவாறும் பூட்டினர்.
மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர். அதனை தொடர்ந்து வீடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும், அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளுடன், வங்கி அதிகாரிகளும் வந்திருந்தனர். வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு தொழில் அதிபர் ராமச்சந்திரனின் வீட்டின் முன்பு 30-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொழில் அதிபர் ராமச்சந்திரன் தனியார் வங்கி ஒன்றில் தனது தொழிலுக்காக கோடி கணக்கில் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை ஒரே நேரத்தில் மொத்தமாக அடைத்து விட்டதாகவும் தெரிகிறது.
இவ்வளவு பெரிய தொகையை எப்படி ஒரே நேரத்தில் கட்ட முடிந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தொழில் அதிபரின் வீட்டில் வங்கி அதிகாரிகள் உதவியுடன் சோதனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சோதனை நடந்து வரும் தொழில் அதிபர் ராமச்சந்திரன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
கோவையில் தொழில் அதிபரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் அவரது உறவினர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.