என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    மத்திய அரசுடன் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி
    X

    மத்திய அரசுடன் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர்.

    கோவில்பட்டி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் மேற்கொண்டுள்ளார்.

    இன்று கோவில்பட்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். காலையில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ பேரவை போதகர்களை சந்தித்தார். பின்னர் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    அதனைத்தொடர்ந்து தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அச்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும். கோவில்பட்டியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதே போல் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுகளில் கடலை மிட்டாயை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



    இதனை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சிறு, குறு தொழில்கள் அதிகமாக செயல்பட்டால் தான் அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. எப்போதெல்லாம் இந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த தொழிலுக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருந்தது.

    இதனை குறைக்க சிறு, குறு தொழில் துறையினர் எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை செய்தோம். தமிழகத்தில் முன்பு தீக்குச்சி இறக்குமதிக்கு 5 சதவீதம் மாநில அரசு வரி இருந்தது. இதனை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 5 சதவீத வரியையும் ரத்து செய்தார்.

    தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர். இந்த தொழிலை காக்க பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இந்த அரசு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் இதுகுறித்து கொண்டு சென்றதாக கூறியுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடலை மிட்டாய் என்றாலே கோவில்பட்டி தான் என்கிற அளவுக்கு இங்குள்ள கடலை மிட்டாய்கள் தரமானது என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மற்ற பகுதிகளில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என போலியாக லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு கோவில்பட்டியில் உள்ள கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் லேபிள் தயாரித்து சோதனை முறையில் அதனை நடைமுறைபடுத்தலாம்.

    நாடு செழித்தால் தான் உற்பத்தி பெருகும். தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். இதற்காகத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் நீர்மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. ஆட்சி அதனை கிடப்பில் போட்டு விட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தாமிரபரணி-வைப்பாறு திட்டம் நிறைவேற்றப்படும்.

    இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவு விளைவிக்கப்படுவதாக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார். தமிழகத்தில் 3 எத்தனால் தொழிற்சாலைகள் தொடங்க திட்டமிடப்பட்டு 2 தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கி உள்ளது. இதற்கு 40 டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதற்கு வருங்காலத்தில் தினமும் எத்தனால் தொழிற்சாலைக்கு 12 ஆயிரம் டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதனால் அதன் விற்பனையும் அதிகரிக்கும்.

    அதேபோல் பருத்தியும் அதே அளவு விளைவிக்கப்படுகிறது. தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் சிறக்க அ.தி.மு.க. துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×