தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.
இவருக்கு பாண்டியன் (வயது 36), அருள் ராஜ் (30), வேல்முருகன் என்ற 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
மகன்களில் வேல்முருகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. பாண்டியன் மற்றும் அருள் ராஜ் ஆகியோர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதில் பாண்டியன் அடிக்கடி வெளியே சென்று விட்டு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அருள் ராஜ் திடீரென மாயமாகியுள்ளார். அவரை வேல்முருகன் தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் தெர்மல் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே நேற்று அங்குள்ள பண்டுகரை ஓடை பகுதியில் நாய்கள் சண்டையிட்டவாறு குறைத்துக் கொண்டிருந்தது.
இதனை அப்பகுதியினர் பார்த்தபோது ஒரு வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது.
இது குறித்து உடனடியாக தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் சோபா ஜென்ஸி, ஜெயந்தி மற்றும் தாசில்தார் முரளிதரன், கிராம நிர்வாக அதிகாரி பிரேமலதா ஆகியோர் விரைந்து சென்றனர்.
இரவு நேரம் என்பதால் போலீசார் இன்று காலை அங்கு சென்று புதைக்கப்பட்ட உடலை தோண்ட முடிவு செய்தனர். இதற்கிடையே அருள் ராஜின் அண்ணனான பாண்டியனும் மாயமானார். இதனால் அவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று பண்டுகரை ஒடை பகுதியில் புதைக்கப்பட்ட வாலிபர் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கொன்று புதைக்கப்பட்டது அருள் ராஜ் மற்றும் அவரது அண்ணன் பாண்டியன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து பாண்டியன், அருள் ராஜ் ஆகியோரது உடல்கள் அதிகாரிகள் முன்னிலையில் அடுத்தடுத்து வெளியே எடுக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் ஒரே கும்பல்தான் கொன்று புதைத்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த 26-ந் தேதி அருள் ராஜூக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அருள் ராஜின் வீடு அருகே கஞ்சா போதையில் ரகளை செய்துள்ளனர். இதை அருள்ராஜ் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று நள்ளிரவில் கும்பல் அருள் ராஜின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெளியே குண்டு கட்டாக பண்டுகரை பகுதிக்கு கடத்திச் சென்று தாக்கி கொலை செய்துள்ளனர்.
சத்தம் கேட்டு பாண்டியன் அங்கு சென்ற நிலையில் அவரையும் கும்பல் தாக்கி கொலை செய்துள்ளது. பின்னர் 2 பேரின் உடல்களையும் அங்கேயே புதைத்தது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று ஒருவரது கை வெளியே தெரிந்த நிலையில் நாய்கள் அந்தப் பகுதியில் வந்து கையை கடித்து இழுத்ததால் இந்த சம்பவம் வெளியாகி உள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.