தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
- ரூ.450 கோடியில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
- தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி:
பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி வந்தார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு கோரிக்கைகள் தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார்.