தமிழ்நாடு செய்திகள்

'எம்புரான்' திரைப்படத்தை தடை செய்யக்கோரி விவசாயிகள் பேரணியாக சென்று மறியல்
- தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.
- ‘எம்புரான்’ திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
கம்பம்:
மலையாள நடிகர் மோகன்லால், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஏற்கனவே இப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் 17 இடங்களில் வந்த படக்காட்சிகளை துண்டித்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து அமைப்புகள் எதிர்ப்பின் காரணமாக காட்சிகளை வெட்டிய படக்குழு தமிழக விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதால் படத்தை திரையிடக்கூடாது என்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கம்பத்தில் இருந்து பேரணியாக சென்றனர். அப்போது 'எம்புரான்' திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த படத்தின் வினியோக உரிமை பெற்றுள்ள கோபுரம் சினிமாஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கூறி அந்த அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.