தமிழ்நாடு செய்திகள்

நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து அமராவதி அணை கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
- பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
- நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து செய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 23 நாட்களுக்கு மேல் அணை நிரம்பியுள்ளது.
இந்தநிலையில் பிரதான ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலமாக 450 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ஆயக்கட்டு சம்மதம் இல்லாத பகுதிகளுக்கு யாரோ ஒருவர் உத்தரவுக்கு இணங்க தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
மடத்துக்குளம் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து வரும் நிலையில் அப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் நீர்வளத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உள்ளூர் பகுதி விவசாயிகளின் மடைகளை அடைத்து உபரி நீரை பிரதான கால்வாய் வழியாக கடந்த 7 நாட்களாக திறந்து விட்டுள்ளனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே நீர்வளத்துறை அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து செங்கண்டிபுதூர் பகுதியில் பிரதான கால்வாயில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது முறைகேடாக விவசாயிகளின் மடைகளை அடைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மடைகளை உடைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.