தமிழ்நாடு செய்திகள்

பஞ்சலிங்க அருவியை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்.
உடுமலை பஞ்சலிங்க அருவியை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்
- உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
- கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அருவி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அருவியை மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.
காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், கன்னிமார் கோவில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இன்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 3 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து 12 ஆயிரம் கன அடி உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், அரவக்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் உடுமலையின் சுற்றுப்புற பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.