தமிழ்நாடு செய்திகள்

சிறுமி உயிரிழப்பு - மதுரை மழலையர் பள்ளிக்கு சீல்
- விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர்.
- தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை:
மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மழலையர் பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி பலியான விவகாரத்தில் மதுரை கே.கே. நகர் தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.