மதுரை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், பூத் கமிட்டி மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.
தமிழகத்தில் கோலோச்சிய அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாநில மாநாடுகளை நடத்துவது வழக்கமான ஒன்று. தொண்டர்களின் பலத்தை காட்டுவதற்கும், மெகா கூட்டணி அமைக்கும் வகையிலும் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி நடைபெறும் இதுபோன்ற மாநாடுகள் தேர்தல்களில் திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற (ஆகஸ்டு) 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறும் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். எத்தனையோ அரசியல் கட்சிகள் மாநில மாநாடுகளை நடத்தியிருந்தபோதிலும், இப்படியொரு மாநாட்டை யாரும் பார்த்திராத வகையில் மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனைகளை விஜய் வழங்கியிருக்கிறார்.

இந்த மாநாட்டிற்காக கடந்த மாதம் 16-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடப்பது, அன்றைய தினமே இதற்கு போலீசார் பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்தை சந்தித்து மனு அளித்தார்.
இதையடுத்து மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் ஜோரூராக தொடங்கியது. வெளியூர்களில் இருந்து மாநாட்டு பந்தல், மேடை, ஆர்ச்சுகள் அமைப்பதற்கான உபகரணங்கள், பொருட்கள் லாரிகள் மற்றும் கண்டெய்னர்களில் வந்து இறங்கின. த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவிலான இடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் செம்மைப்படுத்தப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. அதில் தற்போது மாநாடு மேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. அதேபோல் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் விஜய், நடந்து வந்து தொண்டர்களை சந்திக்கும் வகையிலும் மேடை உருவாகுகிறது.
இந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் தற்காலி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து செய்து தரப்பட்டுள்ளது. இந்த பணிகளை உள்ளூர் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். அடுத்த வாரம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்.
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க. மாநாட்டிற்கான தேதியை மாற்ற பரிசீலிக்குமாறு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணமாக கொண்டு தெரிவித்துள்ளபோதிலும், திட்டமிட்டபடி 25-ந்தேதி மாநாட்டை நடத்துவதில் த.வெ.க.வினர் உறுதியாக உள்ளனர்.
சமீப காலமாக தென் மாவட்டங்களை குறிவைத்து மதுரையில் அரசியல் மற்றும் ஆன்மிக மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதே தென் மாவட்டங்களில் விஜய் தலைமையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மூலம் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.