தமிழ்நாடு செய்திகள்

டாக்டர் வீட்டில் 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
- கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.
- காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 75). நிலக்கடலை வியாபாரி. இவரது மகன் ராஜா (45).
இவர் விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் காசிலிங்கம் வீட்டின் மேல் தளத்தில் அமைந்துள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்று விளக்கை ஏற்றி விட்டு கீழே வந்து இரவு தூங்கியுள்ளார். பின்னர் மீண்டும் இன்று காலை விளக்கை அணைப்பதற்காக சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீடிற்குள் இருந்த பீரோ உடைப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடவியல், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிறப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.