தமிழ்நாடு செய்திகள்

இல.கணேசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி
- தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது
- அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டியவர். மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரீகம் பேணிக்காத்தவர்.
அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்" என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.