தமிழ்நாடு செய்திகள்

கூடங்குளத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது- 5 பேர் கைது
- கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்கள் வழியாக படகுகளில் இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுபவதை தடுக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் கிழக்கு கடற்கரை சாலையில் கூடங்குளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து நெல்லை மாவட்ட போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூடங்குளம் கடல் வழியாக படகில் தடை செய்யப்பட்ட பீடி இலையை ஒரு கும்பல் கடத்துவதற்கு முயற்சி செய்வதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே அவரது தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை கூடங்குளம் பகுதிக்கு விரைந்தது.
கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தினர். டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது கூடங்குளத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலையை அனுப்பி வைக்க கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் ஒரு காரில் வேகமாக வந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் காரை திருப்பிக்கொண்டு தப்ப முயன்றது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அந்த கும்பல் தான் பீடி இலையை இலங்கைக்கு கடத்த முயன்றது என்பது தெரியவந்தது.
இதையடுத்து பீடி இலையுடன் லாரியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசாரின் பிடியில் சிக்கிய 5 பேரையும் கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனா(வயது 70), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சண்முகம்(25), ஏரலை சேர்ந்த சந்தோஷ்குமார்(23), தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி ராஜ்(36), வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார்(42) என்பது தெரியவந்தது.
அந்த கும்பல் கடல் வழியாக கடத்த முயன்ற பீடி இலையின் இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.