தமிழ்நாடு செய்திகள்

நிலச்சரிவு அபாயம் எதிரொலி: லாடபுரம் மயிலூற்று அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை
- லாடபுரம் மயிலூற்று அருவி பிரசித்தி பெற்றது.
- அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்துடன் மேற்கு எல்லையாகவுள்ள பச்சைமலைத் தொடர்ச்சியில் மலையாளப்பட்டி அருகே எட்டெருமைப்பாழி அருவி, தொண்டமாந்துறை அருகே கோரையாறு அருவி, பூலாம்பாடி அருகே இரட்டைப் புறா அருவி போன்றவை உள்ளன.
அதுப்போல லாடபுரம் மயிலூற்று அருவியும் பிரசித்தி பெற்றது. லாடபுரத்தின் அருகேயுள்ள பச்சை மலையில், பாறை மீதிருந்து அருவியாகக் கொட்டுகிற மழைநீர், பாறை மீது அமர்ந்துள்ள மயில் தனது தோகையை விரித்துத் தொங்க விட்டது போல் காணப்பட்டதால் இந்த அருவிக்கு மயிலூற்று அருவி எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
லாடபுரம் அருவிக்கு லாடபுரத்தில் இருந்து, சரவணபுரம் வழியாக பைக்கிலோ, காரிலோ 3 கிமீ தூரம் சென்றபிறகு 10 நிமிடத்தில் பால்போல் கொட்டும் அருவிக்குச் சென்று விடலாம் என்பதாலேயே எளிதில் சுற்றுலா அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்ட மலையேற்ற பாதைகள் பட்டியலின்படி லாடபுரம் மயிலூற்று அருவி மலையேற்ற பாதைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பெரம்பலூர் வனச்சரகம், மயிலூற்று அருவி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதால் கரடு முரடான மலைப்பாதை வழியாக மேலே ஏறிச்செல்லும்போது நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படலாம்.
மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அருவிப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக வரும்போது அபாயகரமான நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி உள்ளே செல்பவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 22 (டி)-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.