தமிழ்நாடு செய்திகள்

மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் மேயர் நேரில் ஆய்வு
- சேவியர் காலனி பூங்கா ஆகியவற்றை மேயர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- உதவி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் பெருமாள், துப்புரவு கண்காணிப்பாளர் ஜானகிராமன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலத்தில் மேயர் ராமகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், 50-வது வார்டு மாட்டு சந்தை, குடிசை பள்ளி அருகில் உள்ள நுண் உரமாக்கும் மையத்தில் தேங்கி உள்ள குப்பைகள், கழிவுகளை அப்புறப்படுத்தவும், ஆமீம்புரம் 7-வது தெருவில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியை உடனே தொடங்கவும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் கூடுதல் கட்டிடம் விரைவில் அமைத்திட நடவடிக்கை எடுக்கவும், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து நடத்திடவும், கழுவுநீர் ஒடைகளை முழுமையாக சுத்தம் செய்யவும், நேதாஜி ரோடு பாதாள சாக்கடை உடைப்பு குழாய்களை மாற்றிட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் 52-வது வார்டு சேவியர் காலனி ஆர்.சி. சர்ச் தெருவில் கடந்த மழை வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கியது. இன்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கழிவு நீர், மற்றும் மழை காலங்களில் மழை நீர் சீராக செல்லும் வகையில் சேவியர் காலனியில் இருந்து புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வேய்ந்தான்குளத்திற்கு செல்லும் வகையில் பெரிய கால்வாய் அமைத்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சேவியர் காலனி பூங்கா ஆகியவற்றை மேயர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம் உதவி கமிஷனர் சந்திரமோகன்,50-வது வார்டு கவுன்சிலர் ரசூல் மைதீன், 52-வது வார்டு கவுன்சிலர் நித்திய பாலையா, கவுன்சிலர்கள் சுந்தர், வில்சன் மணிதுரை, மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல், தி.மு.க. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, இளநிலை பொறியாளர் ஜெய கணபதி, உதவி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் பெருமாள், துப்புரவு கண்காணிப்பாளர் ஜானகிராமன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.