தமிழ்நாடு செய்திகள்

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா- டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
- ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது.
- இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு அரசு சார்பில் டைடல் பூங்காவானது பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.
ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24 X 7 பாதுகாப்பு வசதிகள் , உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.