தமிழ்நாடு செய்திகள்

சீமானின் பேச்சு குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது- அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
- விவசாயிகள் கள் இறக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
- கல்வி கற்று விட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம்.
திருச்சி:
திருச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகள் கள் இறக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அதை சீமான் மிகைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. கால்நடைகள் வளர்ப்பதும் பனை ஏறுவதும் கேவலமா? என சீமான் கேட்கிறார் அந்த தொழில்களை யாரும் கேவலம் என கூறவில்லை.
எங்களின் கொள்கை சமூக நீதி கொள்கை, சமத்துவக் கொள்கை தாழ்ந்து கிடக்கும் மனிதர்களை உயர்த்த வேண்டும் என்கிற கொள்கை. அனைவரும் கல்வி கற்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.
அவர்கள் கல்வி கற்று விட்டு எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்நுட்பங்கள் வந்துள்ளது. அந்த தொழில் நுட்பங்களின் பயன்களையும் அவர்கள் பெற வேண்டும்.
ஆனால் சீமான் பேசுவதை பார்க்கும்போது மக்களை மீண்டும் மனு ஸ்மிருதி காலத்திற்கு அழைத்து சென்று குலத்தொழிலை செய்ய வேண்டும் என்கிற தொனியில் உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
சமூகத்திற்கு கல்வி அடிப்படையாக தேவை என நம் தலைவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். கல்வி கற்று விட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம்.
சிபில் ஸ்கோர் விவகாரத்தை நிவர்த்தி செய்து வருகிறோம். கடன் வாங்குவதற்கு முனைப்பு காட்டுவது போல் கடனை திருப்பி செலுத்துவதற்கும் முனைப்பு காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.