தமிழ்நாடு செய்திகள்

விஜய் 2026-க்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு சென்று விடுவார்- அமைச்சர் சேகர்பாபு
- செங்கல்பட்டில் மிகப்பெரிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
- குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
சென்னை:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகர் புதிய பஸ் நிலையம், சேத்துப்பட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சலவை கூடத்தில் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அந்த வகையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பஸ் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குத்தம்பாக்கம் பஸ் நிலையம் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டில் மிகப்பெரிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. மகாபலிபுரத்தில் பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் நகர் பஸ் நிலையம், திரு.வி.க.நகர் பஸ் நிலையத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
முடிச்சூர் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்த எங்களது சட்டப் பிரிவிடம் பேசி உள்ளோம். விரைவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவோம்.
ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுதான் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இப்பொழுது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுக்கிறார்கள். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி ஏற்படும்.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையப்பணிகளை விரைவுபடுத்த தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் எங்கள் செயலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ரெயில் நிலையத்திற்கான தொகை ரூ.20 கோடி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. அந்த பணி விரைவுபடுத்தப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளார்கள்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறார். நாங்கள் யாரையாவது கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறோமா? இல்லை. அவர்களது கூட்டணியில் உள்ள யாரையாவது விமர்சனம் செய்கிறோமா? எடப்பாடி பழனிசாமி மைக்கை பிடித்தாலே கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்வது, வி.சி.க.வை அழைப்பது என்று தேடித்தேடி அழைத்துக் கொண்டிருக்கிறார்.
புலிக்கு பயந்தவன்தான் தன் மேல் படுத்துக்கொள், தன் மேல் படுத்துக்கொள் என்று கூறுவான். எடப்பாடி பழனிசாமி தினமும் ஒன்று பேசிக் கொண்டிருக்கிறார்.
எங்கள் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்வரை கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. மக்கள் நல பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றியத்தில் முதன்மையாக இருக்கிறார். 2026-ம் ஆண்டு மீண்டும் கிரீடத்தை சூட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
1967, 1977 போன்று 2026-ல் மாற்றம் வரும் என்று விஜய் கூறுகிறார். நிச்சயமாக மாற்றம் வரும். இன்றைக்கு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னவர் 2026-க்கு பிறகு, மீண்டும் நான் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவார். த.வெ.க. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு பிரசாரத்தை தொடங்கட்டும். அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்தால் கூட, எவ்வளவு வித்தை காட்டினாலும் மக்களிடம் காசு பெறுகிற போது இறங்கி வந்துதான் ஆக வேண்டும். ஓட்டு என்ற மகத்தான சக்தி மக்களிடம் உள்ளது. அந்த மகத்தான சக்தி எங்கள் முதலமைச்சரின் பக்கம் உள்ளது. நிச்சயம் வென்று காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையர் கவுசிக் கலந்து கொண்டனர்.