தமிழ்நாடு செய்திகள்

முத்து - முருகேசன்
வையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து- 2 பேர் உயிரிழப்பு
- எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
- மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வையம்பட்டி:
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வாழ்வார்மங்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலவெளியூரை சேர்ந்தவர் முத்து (67). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி அருகே உள்ள தேக்கமலை கோவிலில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு கடவூர் செல்வதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர். தேக்கமலை கோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் தாளகுளத்துப் பட்டியை சேர்ந்த வடிவேல் (39) என்பவர் வந்தார்.
எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து, வடிவேல் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.