தமிழ்நாடு செய்திகள்

பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்வு
- விவசாய குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் கோடை வெயில் தீவிரமாக வறுத்தெடுத்து வந்த நிலையில் நேற்று 4வது நாளாக பல இடங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பகலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை தொடங்கி நள்ளிரவு வரை மழை நீடித்ததால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது.
மேலும் விவசாய குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.
கனமழை காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.69 அடியாக உள்ளது. வரத்து 504 கன அடியாக உள்ள நிலையில் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3000 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.70 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக தண்ணீரே வராத நிலையில் தற்போது அணைக்கு 493 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1509 மி.கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக உள்ளது. வரத்து 32.74 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 48.33 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33 அடி. வரத்து 115 கன அடி. சண்முகாநதியின் நீர்மட்டம் 35.30 அடி. வரத்து 14 கன அடி. இருப்பு 33.76 மி.கன அடி.
போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்ததால் கொட்டக்குடி அணைப்பிள்ளையார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இதே போல் மூல வைகை ஆற்றுப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பக்கரை அருவியில் வட்டக்கானல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 3 நாட்களாக அங்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி 29.6, அரண்மனைபுதூர் 50.4, வீரபாண்டி 28.2, பெரியகுளம் 50.2, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 25.2, வைகை அணை 6.2, போடி 17, உத்தமபாளையம் 46.3, கூடலூர் 21.6, பெரியாறு 3.2, தேக்கடி 15, சண்முகாநதி 57.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.