தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
- விஜயை வரவேற்க ஏராளமான த.வெ.க.வினர் குவிந்ததால் விமான நிலையமே ஸ்தம்பித்தது.
- பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். முதல்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கு நேற்று கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் தொடங்கியது. கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.
முன்னதாக, கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். அப்போது விஜயை வரவேற்க ஏராளமான த.வெ.க.வினர் குவிந்ததால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் டிராலிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாக த.வெ.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.