தமிழ்நாடு செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- கோவிலில் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி தனது 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்ற பிரதமர் மோடி,
தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 11 மணிக்கு ஓட்டலில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு செல்கிறார்.
செல்லும் வழியில் கண்டோன்மெண்ட், பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாரதிதாசன் சாலையின் ஒரு பகுதியில் ரோடு- ஷோ நடத்துவதற்கு வசதியாக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ரோடு ஷோவில் மக்களை சந்திக்கிறார்
கோவிலில் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. பின்னர், வாரணாசியில் இருந்து கொண்டு வரப்படும் கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்த பின்னர் 3 நிமிடங்களுக்கு கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.
இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இசையை கேட்டு ரசிக்கும் பிரதமர் மோடி, பின்னர் மதியம் சுமார் 1.45 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். பிற்பகல் 2.25 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியதும், 2.30 மணிக்கு விமானம் மூலம் நேரடியாக டெல்லிக்கு புறப்படுகிறார்.