தமிழ்நாடு செய்திகள்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை
- மாரிமுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
- மாரிமுத்துவை கொலை செய்து விட்டதாக மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு.
உடுமலை:
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45).
இவர் தமிழக கேரள எல்லையில் நேற்று இரவு புலிப்பல் கடத்தி வரும்போது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் விசாரணைக்காக உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு பின்னர் அலுவலர்கள் வெளியே சென்றனர். அப்போது மாரிமுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் வன ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வன ஊழியர்கள் இதுகுறித்து உடுமலை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் உடுமலை டிஎஸ்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மாரிமுத்துவை கொலை செய்து விட்டதாக கருமுட்டி மேல் குருமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தொடர்ந்து தற்கொலை குறித்து வன அலுவலர் ராஜேஷ், வருவாய் கோட்டாட்சியர் குமார், உடுமலை டி.எஸ்.பி நமச்சிவாயம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.