தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பொய் வழக்கு தொடர்ந்து என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்- ராஜேந்திர பாலாஜி
- என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது.
- கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி சுற்றுப்பயணம் செய்கிறார். அவருக்கு அளிக்க வேண்டிய வரவேற்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமாகிய கே.டி.ராஜேந்திர பாலாஜி கண்கலங்கியபடி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். தனிமை சிறையில் தவித்தேன். ஆனாலும் நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது. என்னைத்தான் அழிக்க நினைத்தார்கள்.
கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். யாரிடமாவது நான் வேலைக்காக பணம் வாங்கியதாக வரலாறு உண்டா? எடப்பாடியாரின் பிரசார முகமாக இருப்பதால் என்னை குறி வைக்கின்றனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்பேன். சிவகாசி என்னுடைய மண். யார் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.