தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டது பெருமைக்குரியது- ராஜேந்திர பாலாஜி திடீர் பாராட்டு
- என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார்.
- தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
சிவகாசி:
காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதற்கு சாட்சியாகவும், அத்தாட்சியாகவும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கின்றனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் வாயிலாக தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
ராமேஸ்வரத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமை நினைவு கூறுகின்ற வகையில், என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார். ஆகவே அவரை வாழ்த்துவது அவரை வரவேற்பது தமிழருடைய கடமை உரிமை.
சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரவேற்றது போற்றக்கூடியதாகும். அவர் ஒரு அற்புதமான பாராளுமன்ற உறுப்பினர்.
அவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கின்ற பெருமையையும், புகழையும் பிரதமர் மோடியும் வைத்திருக்கிறார் என்று தெரிந்து அந்த நிகழ்ச்சியிலே அவர் கலந்து கொண்டது சிறப்புக்குறியது.
இவ்வாறு அவர் கூறினார்.