தமிழ்நாடு செய்திகள்

ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: 2 நாட்களில் முடிவு கிடைக்கும் - ராமதாஸ்
- தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது.
- பராமரிப்பு சரியாக இல்லாவிட்டால் மழை பொழிவின் போது ஆபத்தில் தள்ளிவிடும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள். இதன் முடிவு 2 நாட்களில் வெளிச்சத்துக்கு வரும்.
கடந்த ஆண்டுகளை விட மழைப்பொழிவு இந்தாண்டு அதிகம் என்ற தகவல் உள்ளது. மழை காலம் நெருங்குவதால் நீர் வழி தடங்களில் உள்ள ஷட்டர் பழுதாகி கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. பராமரிப்பு சரியாக இல்லாவிட்டால் மழை பொழிவின் போது ஆபத்தில் தள்ளிவிடும்.
தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஷட்டர்கள், சங்கிலிகள், ரப்பர்கள் பழுதடைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சரி செய்துவிட்டால் பெரிய இழப்பிலிருந்து தப்பிக்கலாம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தாமதிக்காமல் விடுவிக்க வேண்டும்.
அஜித் குமார் மரண வழக்கில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு நீதித்துறை அதிருப்தி தெரிவித்து கொண்டு தான் இருக்கிறது. காவல் துறை தனது போக்குகளை மாற்றி கொள்ள வேண்டும். சென்னை காவல் துறையை நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். 2008 முதல் தற்போது வரை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையினருக்கு யோகா, மன, உடற்பயிற்சி அளித்த பிறகும் தவறிழைக்கிறார்கள் என்றால் அவர்கள் காவல்துறை பணிக்கே தேவையில்லை. சென்னையில் விம்கோ நகரில் ரெயில் சிறைபிடிப்பு தான் நடக்கிறது. புறநகர் ரெயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூறியும் ரெயிலை சிறைபிடிக்கும் போரட்டத்தினை மக்கள் நடத்தியுள்ளனர். இது ரெயில்வே துறையினரின் மெத்தனபோக்கை காட்டுகிறது. ரெயில்வே துறையில் வடமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் தெரியாதவர்கள் நியமிக்கப்படுவதால் மொழி தெரியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததில் யார் மீது சந்தேகம் இருக்கிறது? என்று கேட்ட போது உங்கள் மீது தான் சந்தேகம் என்றார்.