தமிழ்நாடு செய்திகள்

ஆடிப்பெருக்கையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு மங்களூர், பெரியநெசலூர், காட்டுமயில், கழுதூர், சிறுப்பாக்கம், கொத்தனூர், வேப்பூர், தியாகதுருவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளைமறுநாள் (3-ந்தேதி) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது. வாரச்சந்தையில் சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.
இதில் கொடிஆடு, கருப்பாடு, வெள்ளாடு, ஜமுனா பூரி, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளாடு உள்ளிட்ட 8 விதமான ஆட்டுரகங்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த வாரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமான நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.