தமிழ்நாடு செய்திகள்

சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
- பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
- பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.
சென்னை:
காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் ரெயில் நிலையத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
மேலும் போலீஸ் மோப்ப நாய் மூலம் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்திற்கு வருகின்ற அனைத்து பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.
இதே போல சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய நுழைவு வாசல்களில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.