தமிழ்நாடு செய்திகள்

ஓபிஎஸ் குறித்து தரக்குறைவாக பேசாதீர்கள்- கோபமடைந்த செல்லூர் ராஜூ
- வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி.
- கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.
மதுரை:
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று சொல்லுகிறார்கள். இதுபோன்ற மக்களின் எழுச்சி எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது சுற்றுப்பயணத்திலும் பார்க்க முடிந்தது. அது போன்ற கூட்டம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் திரளாக வருவதை பார்க்கும் போது அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.
இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு எட்டு மாதங்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் பெரிய பெரிய கட்சிகள் யாரும் எதிர்பார்க்காத கட்சிகள் வரும் என்று பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். எனவே கூட்டணி முக்கியமல்ல, மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது உணர்வுகளை வாக்குகளாக மாற்றுவதற்காக மிகச்சிறப்பான முறையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வேறு எந்த இயக்கத்திலும் இதுபோல பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை.
எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சீட் பேரம், தொகுதி பேரம் எல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாட்டில் கூட கூட்டணி பிரியும். எனவே கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.
1967-ல் பேரறிஞர் அண்ணா யாரும் எதிர்பாராத வகையில் கொள்கையில் முரண்பட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தார். எனவே கூட்டணியை விட மக்களின் ஆதரவு முக்கியம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் உங்களை எல்லாம் வழி நடத்தியவர் ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மூன்று முறை சந்தித்துள்ளார். அவரை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா? என்று ஒரு நிருபர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி கேட்டார். அப்போது ஆவேசம் அடைந்த செல்லூர் ராஜூ, ஒரு தலைவரைப் பற்றி பாவமா இல்லையா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவறானதாகும். அவர் மூன்று முறை அல்லது நான்கு முறை யாரையாவது சந்திக்கட்டும். அது பற்றி எல்லாம் இப்போது பேசுவதற்கு இல்லை என்று காட்டமாக பதில் அளித்தார்.