தமிழ்நாடு செய்திகள்

நெல்லையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது: வேகமாக குறையும் அணைகளின் நீர்மட்டம்
- நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பகல் நேரங்களில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
- வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பகல் நேரங்களில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டன. சுமார் 300 குளங்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருக்கிறது.
தற்போது கோடை மழை பரவலாக பெய்தாலும் அந்த மழைநீரால் வெப்பத்தை தான் தணிக்க முடிகிறதே தவிர நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உயர்த்த முடியவில்லை. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய பிரதான அணைகளில் மட்டும் தண்ணீர் இருப்பு போதுமான அளவு இருக்கிறது. நேற்று சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
அதே நேரத்தில் மாவட்டத்தில் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளின் நீர் இருப்பு கோடை வெயிலின் தாக்கத்தால் வேகமாக குறைந்து ஒற்றை இலக்கத்தை நெருங்கி வருகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் 10.25 அடி நீர் இருப்பு உள்ளது. இதில் சுமார் 8 அடி வரை சகதி தான் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் 23 அடி கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், 52.50 அடி கொண்ட கொடுமுடியாறு அணை 14.75 அடியாகவும் உள்ளது. இதனால் களக்காடு, ராதாபுரம் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை மழை ஓரளவு பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடாவது ஏற்படாத நிலை இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நேற்று சேரன்மகாதேவி, அம்பை, முக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில் மாலையில் சுமார் 1/2 மணி நேரம் கனமழை பெய்தது. அம்பை, சேரன்மகாதேவியில் தலா 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கியது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் 1/2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவகிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, கயத்தாறு, காமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கோடை மழை பரவலாக பெய்தது. குறிப்பாக சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்பட்டி, விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்திலும் இடியுடன் கூடிய கன மழை பரவலாக பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பம் தணிந்ததால் மக்களும் நிம்மதி அடைந்தனர்.